search icon
என் மலர்tooltip icon
    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
    • 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர்.

    இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் விண்ணப்பிக்கப்படுகிறது. அதனால் விண்ணப்பிப்ப தற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
    • சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2 மாதம் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு தற்போது கோடை மழை ஆறுதலாக உள்ளது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    அதிகபட்ச வெப்பம் நிலை இயல்பைவிட குறைவாகவே உள்ளது. இதனால் உஷ்ணம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்கள் தற்போது சற்று விடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் 22-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரண மாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    அதன் படி இன்று (18-ந் தேதி) அநேக இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (19-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராம நாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் இப்பகுதிக ளுக்கு மீனவர்கள் 21-ந் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

    வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளனர்.

    அதன்படி தலா 30 வீரர்கள் கொண்ட தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்துக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 300 வீரர்களை கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் அனைத்து மீட்பு உபகர ணங்களுடன் தயார் நிலை யில் நிறுப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் கோரிக் கையின்படி அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு' வெளியான நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதனால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்காக நடிகர் விஜய் வெளிநாடுக்கு செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தின் VFX பணிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
    • அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

    நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.

    ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

    லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.

    இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.

    ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    • சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கோடை மழை ஒரு சில பகுதிகளில் கனமழை யாகவும், சில இடங்களில் சாரலாகவும் பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் பிற்பகலில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரையிலும் நீடித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு அதிகபட்சமாக 5.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. பிரதான அணையான பாபநாசத்தில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. கன்னடியன் கால்வாய் பகுதிகளிலும் பலத்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளுக்கு நீர் வரத்து பெரிய அளவில் இல்லை என்றாலும் கோடை மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் தலையணை அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    களக்காட்டில் அதிக பட்சமாக 22.6 மில்லி மீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் அம்பையில் கனமழை பொழிந்தது. வி.கே.புரம், பாபநாசம், அகஸ்தியர்பட்டி, சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.அம்பையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பில் வருகிற 22-ந்தேதி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க செல்லவேண்டாம் என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நீடித்து வரும் நிலையில், இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மாவட்டத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே அங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வரை பழைய குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேறிய நிலையில் வெள்ளம் திடீரென அருவியின் படிக்கட்டு பகுதிகளிலும் நிரம்பி ஓடியது. இந்த வெள்ளப் பெருக்கின்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    தீயணைப்பு துறையினர் அவரது உடலை சுமார் 500 அடி தூரத்தில் பாறை இடுக்கில் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து வந்தனர். தொடர்ந்து பழைய குற்றாலம், மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு கலெக்டர் தடை விதித்தார்.

    மேலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கரைக்கு வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே மேற்கொண்டு அசம்பாவி தங்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றாலம் அருவியின் அருகே இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக அருவிக்கரையில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அணைகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கருப்பாநதி, கடனா நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

    மாலை 3 மணிக்கு பிறகு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இன்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த சூழ்நிலை நிலவியதோடு மூடு பனியும் நிலவியது. இன்று காலையில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி நிலவியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும்.
    • கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    மாட்ரிட்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பெல்ஜியத்துடன் இணைந்து இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

    சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி, டென்மார்க் கொடியுடன் மரியான் டானிகா என்ற கப்பல் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டு துறைமுகத்துக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் கூறும்போது, சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும். மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை, அதற்கு அதிக அமைதி தேவை என்றார்.

    கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஏற்று மதிக்கு தடை செய்யப்படாத பொருட்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.

    திருப்பதி, மே.18-

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.

    அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.

    உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

     சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.

    அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.

    சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-

    நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.

    சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வார இறுதி நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    கோவை:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது.

    இங்குள்ள 7-வது மலையில் சுயம்புவடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பூலோகத்தின் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மலைப்பாதை வழியாக சென்று வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சனை, கைதட்டி சனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற மலைகளை கடந்தால் 7-வது மலையில் வீற்றிருக்கும் சுயம்புலிங்க பெருமானை தரிசிக்க முடியும். மேலும் இந்த மலைப்பாதை பயணம் என்பது மிகவும் கரடு-முரடானது.

    வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்து உள்ளது. இதனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    வெள்ளியங்கிரி மலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43, 199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள அறைகள் முழுவதிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிருஷ்ண தேஜாவிலிருந்து ஷீலா தோரணம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,510 பேர் தரிசனம் செய்தனர். 43, 199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.

    ×